கர்நாடகா தர வேண்டிய நீர் 91 டி.எம்.சி.,யாக அதிகரிப்பு
கர்நாடகா தர வேண்டிய நீர் 91 டி.எம்.சி.,யாக அதிகரிப்பு
ADDED : ஜன 13, 2024 08:02 PM
சென்னை:கர்நாடகாவின் காவிரி நீர் நிலுவை, 90 டி.எம்.சி., யாக அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, ஜூன் மாதம் நீர் வழங்கும் தவணை காலம் துவங்கும்.
கடந்தாண்டு ஜூனில், 9.19 டி.எம்.சி.,க்கு பதிலாக, 2.83 டி.எம்.சி., யும்; ஜூலையில், 31.24 டி.எம்.சி.,க்கு பதிலாக 8.74; ஆகஸ்ட் மாதம் 45.9 டி.எம்.சி., பதிலாக, 19.99 டி.எம்.சி., நீரும் கிடைத்தது.
கடந்த செப்டம்பரில் 36.7 டி.எம்.சி.,க்கு பதிலாக 13.5; அக்டோபரில் 20.22 டி.எம்.சி.,க்கு பதிலாக 12.8; நவம்பரில் 13.7 டி.எம்.சி.,க்கு பதிலாக 10.6; டிசம்பரில் 7.35 டி.எம்.சி.,க்கு பதிலாக 5.44 டி.எம்.சி.,யும் திறக்கப்பட்டது.
நடப்பு ஜன., மாதம் 2.76 டி.எம்.சி., நீரை திறக்க வேண்டும். இதில், 10ம் தேதி வரை 0.86 டி.எம்.சி., கிடைத்துள்ளது.
மொத்தமாக ஜூன் முதல், 165 டி.எம்.சி., நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 74.9 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்து உள்ளது.
கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீரின் அளவு 90.4 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது. இதனால், பருவ மழை குறைந்த நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் கோடை கால குடிநீர் தேவையை சமாளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

