முதல்வர் குடும்பத்தினருக்கு கமல் வீட்டில் விருந்து
முதல்வர் குடும்பத்தினருக்கு கமல் வீட்டில் விருந்து
ADDED : நவ 09, 2025 01:07 AM

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தன் பிறந்த நாளை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தடபுடல் விருந்து அளித்தார்.
தன், 71வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கமல் கொண்டாடினார். ராஜ்யசபா எம்.பி.,யான பின், முதல் பிறந்த நாள் விழா என்பதால், கமல் வீட்டிலும், கட்சி அலுவலகத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம., தலைமை அலுவலகத்தில், துபாய் மந்தி பிரியாணி மாஸ்டர் தயாரித்த, மட்டன் பிரியாணி, சிக்கன் குருமா, மீன் வறுவல், கத்திரிக்காய் தொக்கு, தயிர் பச்சடி மற்றும் இனிப்புடன், 2,000 பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது.
அதேபோல் நேற்று முன்தினம் இரவில், சென்னை போட் கிளப்பில் உள்ள தன் வீட்டில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தனி விருந்துக்கு, கமல் ஏற்பாடு செய்தார்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதி மற்றும் குடும்பத்தினர், கமல் வீட்டுக்கு சென்றனர். கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும், கமல் வீட்டில் இருந்த அவரது அண்ணன் சாருஹாசனிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.
முதல்வர் மனைவி துர்கா, உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர், கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
வரவேற்பு அறையில் அமர்ந்து, நீண்ட நேரம் பேசினர். கமல் வீட்டில் தயார் செய்த உணவு வகைகளும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகளும் பரிமாறப்பட்டன.
மகிழ்ந்தோம்
நெகிழ்ந்தோம்!
என் அழைப்பை ஏற்று, என் இல்லத்திற்கு வருகை தந்து, என்னையும், சாருஹாசனையும் கவுரவப்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி. பொதுவாக, அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள்; மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும்.
ஆனால், கருணாநிதியுடனான என் உறவு மூன்று தலைமுறையை தாண்டிய நெருக்கம் கொண்டது. துாய பேரன்பால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக் கட்டப்பட்டது, எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு. மாலை விருந்தில் மகிழ்ந்தோம்; நெகிழ்ந்தோம்.
- கமல், தலைவர், ம.நீ.ம.,
- நமது நிருபர் -

