ADDED : மார் 20, 2025 12:14 AM
சென்னை:'திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ., கொலை செய்யப்பட்டது குறித்து, முழு விசாரணை நடத்த வேண்டும்' என, காங்கிரஸ், ம.தி.மு.க., - த.மா.கா., போன்ற கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டுள்ள கும்பல், தம்மை கொலை செய்யக் கூடும். திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் இருவரும் தாம் கொலை செய்யப்படுவதை ஊக்குவிப்பதாகவும், போலீஸ் துறை அலுவலர்கள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளில், போலீஸ் துறை மிகவும் துரிதமாக செயல்பட்டு, குற்றச் செயல்கள் நடப்பதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும். விழிப்புடன் கடமையாற்ற தவறிய போலீஸ் அதிகாரிகள் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு புலனாய்வு படை முழு விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஆரீப்: அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், யார் யாரெல்லாம் அந்த சொத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர்; யாரால் தனக்கு அச்சுறுத்தல் என்கிற விபரத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸ் துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
த.மா.கா., தலைவர் வாசன்: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்ட பின், இக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சிக்குரியது. அது மட்டுமல்ல, இது சம்பந்தமாக வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், போலீஸ் துறையினர் உடனே நடவடிக்கை எடுத்திருந்தால், கொலைச் சம்பவம் நடக்காமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், புகார் சம்பந்தமாக, வீடியோ சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் துறையினரின் மெத்தனப்போக்கால் கொலை நடந்திருப்பது கொடுமையிலும் கொடுமை.
முன்னாள் போலீஸ் அதிகாரிக்கே இந்நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கான பாதுகாப்பில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.