திருமண தகவல் மையம் பெயரில் புதுசா கிளம்பும் மோசடி.. உஷாராக இருங்க
திருமண தகவல் மையம் பெயரில் புதுசா கிளம்பும் மோசடி.. உஷாராக இருங்க
ADDED : நவ 29, 2025 12:42 AM

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் மணமகள், மணமகன் தேவை என பதிவு செய்துள்ளவர்களின் விபரங்களை சேகரித்து ஒரு கும்பல் புது வித மோசடியில் ஈடுபட்டு பணம் பறிகிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு வரை திருமண தகவல் மை யங்கள் ஒரு சில மட்டுமே இருந்தன. பெரும்பாலும் உறவினர்களிடையே மணமகள், மணமகன் தேவை குறித்து தெரிவித்து அவர்கள் மூலமாகவே திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டு வந்தன. குறிப்பிட்ட தொகை செலுத்தி இணையதளங்களில் பதிவு செய்தால் குறிப்பிட்ட நாட்கள் வரை மணப்பெண், மண மகள் பற்றிய விபரங்களை தெரிவித்து வந்தனர்.
இதில் சில மோசடி கும்பல் நுழைந்து தகவல்களை சேகரிக்கின்றனர். மணமகள், மணமகனுக்கு ஏற்ற ஜாதகத்தை தயார் செய்து, போலியாக பெண், மாப்பிள்ளை படங்களை தயார் செய்கின்றனர். ஜாதகப் பொருத்தம் பாருங்கள், பொருத்தம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் முகவரி, போன் நம்பர் தருகிறோம் என்கின்றனர்.
அதன் பின் அவர்களை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு நெருங்கிய நபர்களை கான்பரன்ஸ் கால் மூலம் பேச வைக்கின்றனர். முகவரி வேண்டுமென்றால் ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய் செலுத்துங்கள் என்கின்றனர். பணம் செலுத்திய பின் எந்த தகவலும் தருவதில்லை. அலைபேசியில் தொடர்பு கொ ண்டாலும் எடுப்பதில்லை.
திருப்புவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக பதிவு செய்துள்ளார். வேலுார் வாணியம்பாடியில் இருந்து பெண் போட்டோ, ஜாதகம் எல்லாம் அனுப்பியுள்ளனர். பொருத்தம் இருப்பதாக கூறவே மூவாயிரம் ரூபாய் அனுப்பினால் முகவரி, அலைபேசி நம்பர் தருவதாக கூறியுள்ளனர். பணம் அனுப்பிய பின் எந்த தகவலும் இல்லை.
வேறு நம்பரில் அழைத்து கேட்டாலும் மேலும் ஐந்தாயிரம் ரூபாய் தந்தால் அனுப்புகிறோம் என அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.
குறைந்த தொகை என்பதால் போலீசிலும் புகார் செய்யவில்லை. திருப்புவனத்தில் இதுபோன்று பலரிடமும் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே மணமகள், மணமகன் தேவை என்றால் நம்பிக்கையான நபர்களிடம் தொடர்பு கொள்ளவும், மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

