வழக்கில் குற்றம் சாட்டப்படாதவரை தடுத்து வைக்க முடியாது: ஐகோர்ட்
வழக்கில் குற்றம் சாட்டப்படாதவரை தடுத்து வைக்க முடியாது: ஐகோர்ட்
ADDED : ஜூன் 11, 2025 01:40 AM
சென்னை:'வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படாத நிலையில், வெளிநாட்டினரை கால வரம்பின்றி தடுத்து வைக்க முடியாது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வங்கிக் கடன் மோசடி வழக்கில், மேல் விசாரணையை ஓராண்டில் முடிக்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளது.
கரீபியன் தீவில் உள்ள, பிரிட்டிஷ் விர்ஜின் தீவை மையமாக வைத்து செயல்படும், 'பிராட்கோர்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' என்ற நிறுவனத்தில், தொழில் அதிபர் சிவசங்கரன், கார்த்திக் பார்த்திபன் ஆகியோர் இயக்குநர்களாக பணிபுரிந்தனர்.
சட்ட விரோதம்
இயக்குநராக இருந்த காலத்தில், 'ஏக்செல் சன்ஷைன் லிமிடெட்' என்ற நிறுவனம், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடனாக பெற்று, சட்ட விரோதமாக 'பிராட்கோர்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்'க்கு மாற்றிய விவகாரத்தில், சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், கடந்த 2022ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், செஷல்ஸ் நாட்டை சேர்ந்த கார்த்திக் பார்த்திபன், இந்தியா திரும்பியதும், அவருக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது.
தான் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லாதபோது, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, 'லுக் அவுட்' நோட்டீசை திரும்ப பெறக் கோரி, கார்த்திக் பார்த்திபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில், 'வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படாத நிலையில், வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் தடுப்பது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது' என வாதிடப்பட்டது.
சி.பி.ஐ., தரப்பில், 'வங்கி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், 31 பேர் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள். வழக்கில் இன்னும் மேல் விசாரணை நடக்கிறது.
'லுக் அவுட்' நோட்டீசை ரத்து செய்தால், அவர் செஷல்ஸ் நாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளது. அங்கு சென்றால், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவது சிரமம். ஏனெனில், செஷல்ஸ் நாட்டுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை கொண்டு வர, இந்தியா எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, நோட்டீசை ரத்து செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ கூடாது' என, வாதிடப்பட்டது.
குற்றச்சாட்டு
இதையடுத்து நீதிபதி வழங்கிய உத்தரவு:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படாத நிலையில், வெளிநாட்டவரை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது. எனவே, அவருக்கு எதிரான வழக்கில், சி.பி.ஐ., ஓராண்டில் புலன் விசாரணையை முடிக்க வேண்டும்.
விசாரணை முடிவில், மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு, முகாந்திரம் இல்லை என தெரியவந்தால், அவருக்கு எதிரான நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால், லுக் அவுட் நோட்டீசை நிலுவையில் வைத்து, வழக்கை எதிர்கொள்ள செய்ய வேண்டும். மலேஷியாவில் வரும் 26ல் நடக்கும், சகோதரர் திருமணத்தில் பங்கேற்க, கார்த்திக் பார்த்திபனுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. குடும்பத்தினரை பார்க்கும் நேரத்தில், அவர் மீதான நோட்டீசை, சி.பி.ஐ., தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.