துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சமீபத்தில் கட்டிய தடுப்பு சுவர் இடிந்தது
துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சமீபத்தில் கட்டிய தடுப்பு சுவர் இடிந்தது
ADDED : டிச 16, 2024 02:06 AM

துாத்துக்குடி: துாத்துக்குடியில் செயல்படும், தமிழக அரசின் மின்சார வாரியத்திற்கு சொந்தமான, அனல் மின் நிலையத்தில் தலா, 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் வரை மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்குள்ள பாய்லர்களை குளிர்விப்பதற்காக கடலில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு, சில ரசாயனங்கள் கலந்து பயன்படுத்துவது வழக்கம். இதற்காக, 20 அடி அகலத்தில், 25 அடி ஆழத்தில் கிணறு போன்ற அமைப்பு உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் அந்த பகுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
அதில் இருந்து வெளியேறிய தண்ணீர், சாம்பல் கழிவுகளுடன் சேர்ந்து பாய்லர்களுக்குள் புகுந்ததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரு மாத பராமரிப்பு பணிகளுக்கு பிறகே மின் உற்பத்தி துவங்கியது.
இதையடுத்து, தண்ணீர் மீண்டும் உள்ளே புகாத வகையில், 500 மீட்டர் நீளத்திற்கு, 6 அடி உயரத்தில், 50 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கியது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அந்த பணிகள் நிறைவடைந்தன. இனிமேல், தண்ணீர் பாய்லருக்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என, அனல் மின்நிலைய நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், தற்போது பெய்யும் மழை காரணமாக, 6 மாதத்திற்கு முன் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து சாம்பல் கழிவுகளுடன், பாய்லர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால், 1, 2, 3 ஆகிய யூனிட்டுகளில், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிக்கு ஒரு மாதம் வரையாகும் என்று கூறப்படுகிறது. 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

