ADDED : நவ 07, 2025 07:16 AM
சென்னை: முதல்வர் ஸ்டாலினை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, கடந்த 2016ல், அ.தி.மு.க., கூட்டணியில், பரமத்திவேலுார் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார். ஜெயலலிதா மறைவுக்கு பின், தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தனியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர், நேற்று முன்தினம் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று தனியரசு சந்தித்தார்.
பின், அவர் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்திக்க விரும்பினேன். தி.மு.க., கூட்டணியில் நான் இல்லாவிட்டாலும், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்தேன். பல்வேறு பிரச்னைகளில், தி.மு.க.,வுடன் இணைந்து குரல் கொடுத்து வருகிறோம். கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவோம்,” என்றார்.

