முப்போகம் விளையும்; எக்காலமும் விலை குறையாது! மக்காச்சோளம் பயிரிட வேளாண் பல்கலை துறை தலைவர் அழைப்பு
முப்போகம் விளையும்; எக்காலமும் விலை குறையாது! மக்காச்சோளம் பயிரிட வேளாண் பல்கலை துறை தலைவர் அழைப்பு
ADDED : அக் 27, 2024 01:58 AM

கோவை:''எத்தனால் உற்பத்திக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால், மக்காச்சோளத்துக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, எக்காலத்திலும் விலை குறையாது. குறைந்த உழைப்பில் நிறைந்த வருவாய் பெற, விவசாயிகள் முப்போகமும் மக்காச்சோளம் பயிரிடலாம்,'' என, கோவை வேளாண் பல்கலை, சிறுதானியங்கள் துறை தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழுடன் அவர் பகிர்ந்து கொண்டதாவது:
மக்காச்சோளம், கோழி, மாட்டுத் தீவனம், 'ஸ்டார்ச்' தொழிற்சாலைகளில் உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படுகிறது. எத்தனால் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. அதிக தேவை காரணமாக, மக்காச்சோளம் நல்ல விலைக்கு போகிறது.
மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு 22.25 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் மக்காச்சோள உற்பத்தி 30 லட்சம் டன்; தேவை மிக அதிகம்.
கோழி, மாட்டுத் தீவனங்களுக்கே 50-60 லட்சம் டன் தேவை; வட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளத்தின் விலை அதிகம். எனவே, மக்காச்சோளம் சாகுபடி செய்தால் தமிழக விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
நிகர வருவாய் அதிகம்
மக்காச்சோளத்துக்கு சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனத்தைப் பயன்படுத்தி, நவீன சாகுபடி முறைகளைப் பின்பற்றினால், ஏக்கருக்கு 35 முதல் 40 குவிண்டால் மகசூல் கிடைக்கும். தமிழகத்தில்தான் உற்பத்தித் திறன் அதிகம்.
மக்காச்சோள சாகுபடி பரப்பு 2000 - -2001ம் ஆண்டில் ஒரு லட்சம் ஹெக்டேர் கூட இல்லை. தற்போது, 4.55 லட்சம் ஹெக்டராக உள்ளது.
தமிழக அரசு, மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க, 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஒரு ஏக்கருக்கான நிகர வருவாயை பொருத்தவரை, மக்காச்சோளத்துக்கு நிகராக எந்த பயிரிலும் கிடைக்காது. மானாவாரி, இறவை, கோடை என, எந்த பருவத்திலும் பயிரிடலாம். பட்டம் தவறினாலும், நடுவில் எந்த மாதத்திலும் பயிரிடலாம்.
மக்காச்சோளம் பூக்கும்தருணத்தில் கடும் வெயிலோ, வறட்சியோ இருக்கக்கூடாது. பிப்ரவரியில் விதைத்தால், ஏப்ரலில்கடும் வெயில். மகரந்தம் காய்ந்துவிடும்; மணி அவ்வளவாக பிடிக்காது. மற்றபடி, ஆண்டின் எந்த நாளிலும் விதைக்கலாம்.
எத்தனால் உற்பத்தி
மக்காச்சோளம் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு ஏராளமான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
வரும், 2025க்குள் எரிபொருளில் 20 சதவீதம் எத்தனால் கலக்க, 'இ20' இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது, 885 எத்தனால் உற்பத்தி ஆலைகள் உள்ளன. தமிழகத்திலும் எத்தனால் உற்பத்தி துவங்கியுள்ளது.
இன்னும் ஆலைகள் வரவுள்ளன. 'இ20' இலக்கின்படி, எத்தனால் உற்பத்திக்காக வரும் ஆண்டில், 40 லட்சம் டன் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும்.
கோழித் தீவனம், மாட்டுத் தீவனம், எத்தனால் உற்பத்தி, 'ஸ்டார்ச்' தொழிற்சாலை என, மக்காச்சோளத்துக்கான தேவை பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
வரும் 2030ல் பெட்ரோலில் 30 சதவீத எத்தனால் 'இ30' கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எத்தனாலுக்காக மட்டுமே, 360 லட்சம் டன், இதர உபயோகங்களுக்கு, 360 லட்சம் டன் என, 2030ல், 720 லட்சம் டன் தேவைப்படும். தற்போதைய மக்காச்சோள உற்பத்தி, 380 லட்சம் டன் தான்.
தமிழக உற்பத்தி, 30 லட்சம் டன்னாக உள்ளது; 60 லட்சம், 100 லட்சம் டன் என, எவ்வளவு வேண்டுமானாலும் உற்பத்தியை அதிகரிக்கலாம். கால்நடைத் தீவனத்துக்காக இங்கேயே விற்பனை செய்யலாம். எத்தனால் ஆலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது; அவை, எவ்வளவு இருப்பினும் கொள்முதல் செய்யும்.
வட இந்திய விவசாயிகள் விற்பனை செய்யும் விலையை விட, அதிக விலைக்கு தமிழக விவசாயிகள் இங்கேயே விற்பனை செய்யலாம்.
சாகுபடி எளிது
இருக்கும் பயிர்களிலேயே, மக்காச்சோளத்தை எளிதாக பயிர் செய்யலாம். நடவு முதல் அறுவடை வரை முழு இயந்திர மயமாகியிருக்கிறது. சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இயந்திர அறுவடைதான். ஆள் பற்றாக்குறை கவலை இல்லை.
களைகளை கட்டுப்படுத்த, புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளன. சொட்டுநீர் பாசனத்தால், சிக்கனமான நீரில், அதிக விளைச்சல் எடுக்கலாம். தமிழகத்தில் மூன்று போகத்திலும் சாகுபடி செய்யலாம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்கலாம். இருபோகம் சாகுபடி செய்பவர்கள், மூன்று போகம் செய்யலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மக்காச்சோளம் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டாலும் நல்ல விலை கிடைக்கும். எத்தனால் ஆலைகளுக்கு அனுப்பி விடலாம். விலை குறைய வாய்ப்பே இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரு ஏக்கருக்கான நிகர வருவாயைப் பொருத்தவரை, மக்காச்சோளத்துக்கு நிகராக எந்தப் பயிரிலும் கிடைக்காது. மானாவாரி, இறவை, கோடை என, எந்தப் பருவத்திலும் பயிரிடலாம். பட்டம் தவறினாலும், நடுவில் எந்த மாதத்திலும் பயிரிடலாம்.