மாநகர பஸ்சில் திடீர் ஓட்டை தொங்கியபடி பயணித்த பெண்
மாநகர பஸ்சில் திடீர் ஓட்டை தொங்கியபடி பயணித்த பெண்
ADDED : பிப் 06, 2024 11:58 PM

அமைந்தகரை:மாநகர போக்குவரத்துகழக பஸ்சில் பயணித்த பெண் பயணி, பஸ்சின் பலகை உடைந்து ஓட்டையில் சிக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு வரை செல்லும், 'தடம் எண்: 59' மாநகர பஸ், நேற்று மதியம் பயணியரை ஏற்றிக் கொண்டு, அமைந்தகரை வழியாக கோயம்பேடு நோக்கிச் சென்றது. மகளிருக்கான கட்டணமில்லா இலவச பஸ் என்பதால், பெண் பயணியர் அதிகமாக இருந்துள்ளனர்.
பஸ், அமைந்தகரை 'ஸ்கை வாக்' வணிக வளாகம் அருகே சென்ற போது, பின்புறம் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர், என்.எஸ்.கே., நகர் நிறுத்தத்தில் இறங்க எழுந்துள்ளார்.
அப்போது திடீரென, அவர் நின்ற இடத்திலிருந்த பலகை உடைந்துள்ளது. ஓட்டை வழியாக கீழே விழுந்த அவர், முன் இருக்கையின் கம்பியை பிடித்து, கால் பகுதி மட்டும் பஸ்சின் அடிப்பகுதியில் தொங்கியபடி சத்தம் போட்டுள்ளார்.
இதை பார்த்த சக பயணியர் அலறி கூச்சலிட, அண்ணா வளைவு மேம்பாலம் அருகே பஸ் நிறுத்தப்பட்டது. உடனே, ஓட்டையில் சிக்கிய அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இதில் அவருக்கு, சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், ஆட்டோவில் கிளம்பிச் சென்றுள்ளார்.
பஸ்சில் பயணித்த பயணியர் இதுகுறித்து ஓட்டுனர், நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதை கண்டுகொள்ளாத அவர்கள், சிறிது துாரத்தில் சாலையில் விழுந்து கிடந்த பலகையை மட்டும் எடுத்தனர்.
பின், மற்ற பயணியரை அவ்வழியே வந்த மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி விட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் பஸ்சுடன் தப்பினர்.
பயணியர் சிலர், இதை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இதுகுறித்து, அமைந்த கரை போலீசார் மற்றும் அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

