ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுங்கள் கட்சியினருக்கு விஜய் அறிவுரை
ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுங்கள் கட்சியினருக்கு விஜய் அறிவுரை
ADDED : அக் 04, 2024 07:56 PM
சென்னை:'மாநாட்டுக்கு வரும் கட்சியினர், ராணுவ கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார்.
கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழக மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதுதான் என் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிகிற ஒரு லட்சியக் கனல்.
நம் கட்சியின் முதல் மாநாடு என்பது, நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும்; பொறுப்பான குடிமகனை தான் நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் திகழும் மனிதனைத் தான் மக்கள் போற்றுவர். நம் கட்சியினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, பங்கேற்பது வரை, நம் கட்சியினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நாம் உணரவைக்க வேண்டும்.
நம் கட்சி, மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல்மிக்க பெரும்படை, இளஞ்சிங்கப் படை, சிங்கப் பெண்கள் படை, குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை.
நம்மிடம் உற்சாகம் இருக்கலாம், கொண்டாட்டம் இருக்கலாம், குதுாகலம் இருக்கலாம். ஆனால், படையினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடுமிக்கதாக மட்டுமில்லாமல், பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா, மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா, களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில், அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டும்போதுதான், அவர்களுக்கு நாம் யார் என்பதே புரியும்.
தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பெயருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல. வீறு கொண்டு எழுந்து, அரசியல் களத்தில் வெற்றி காணப் போகிற கட்சி என்பதை, நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்து கொள்வர்.
அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும் யதார்த்தமாக இருப்பதை விட, எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.
மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அது சார்ந்த சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.