'சர்வே' எண் சரிபார்க்காமல் பத்திரம் பதிந்தால் நடவடிக்கை
'சர்வே' எண் சரிபார்க்காமல் பத்திரம் பதிந்தால் நடவடிக்கை
ADDED : பிப் 01, 2024 12:36 AM
சென்னை:வருவாய் துறை தகவல் தொகுப்பில், 'சர்வே' எண்களின் பின்னணியை சரிபார்க்காமல், பத்திரங்களை பதிவு செய்யும் சார் - பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வருவாய் துறையில், 'தமிழ் நிலம்' என்ற தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் தொகுப்பை பயன்படுத்த, வருவாய் துறை அனுமதி வழங்கி உள்ளது. பத்திரப் பதிவுத்துறை இணையதளத்தில், இதற்கான இணைப்பு வசதி உள்ளது.
இதை பயன்படுத்தி, பதிவுக்கு வரும் பத்திரத்தில் உள்ள சர்வே ஏண்களின் உண்மை தன்மையை, சார் - பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும். ஆனால், யாரும் சரிபார்ப்பது இல்லை. இதனால், மோசடி பத்திரங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதிவுக்கு வரும் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்களை, தமிழ் நிலம் தகவல் தொகுப்பு வாயிலாக சரிபார்க்க வேண்டியது கட்டாயம். இதில், புதிய சர்வே எண்கள் மட்டுமே உள்ளதாகவும், உட்பிரிவு விபரங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளில், வருவாய் துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்று சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும். ஆனாலும், சர்வே எண்களை சரிபார்க்காமல், பத்திரங்களை பதிவதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.