டில்லிக்கு போதை பொருள் கடத்த திட்டமிட்டதாக நடிகர் வாக்குமூலம்
டில்லிக்கு போதை பொருள் கடத்த திட்டமிட்டதாக நடிகர் வாக்குமூலம்
ADDED : அக் 03, 2025 02:01 AM

சென்னை: 'மும்பை மற்றும் டில்லிக்கு போதை பொருள் கடத்த திட்டமிட்டு இருந்தேன்' என, சென்னை விமான நிலையத்தில் கைதான துணை நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஹிந்தி பட துணை நடிகர் விஷால் பிரம்மா, 35. இரு தினங்களுக்கு முன், சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த இவர், கம்போடியா நாட்டில் இருந்து, 35 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் எனும் போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் விஷால் பிரம்மா அளித்துள்ள வாக்குமூலம்:
கம்போடியா நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து சென்னைக்கு கோகைன் கடத்தி வந்தேன். நான், டில்லி மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கும், போதை பொருள் கடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தேன்.
சினிமா துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கும் போதை பொருள் சப்ளை செய்து உள்ளேன்.
தற்போது கடத்தி வந்த கோகைனை யாரிடம் கொடுக்க வேண்டும் என எனக்கு தெரியாது. விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும், கம்போடியாவில் உள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார் என எனக்கு கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.