நடிகர் வடிவேலு வெற்றிக்கு பின்னணியில் இருந்தவன் நான் ஐகோர்ட்டில் சிங்கமுத்து பதில் மனு
நடிகர் வடிவேலு வெற்றிக்கு பின்னணியில் இருந்தவன் நான் ஐகோர்ட்டில் சிங்கமுத்து பதில் மனு
ADDED : அக் 04, 2024 12:21 AM
சென்னை:'நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னணியில் நான் இருந்தேன். என்னை பயன்படுத்தி, சொத்துக்களை அவர் வாங்கினார்' என, நடிகர் சிங்கமுத்து பதில் அளித்துள்ளார்.
நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிராக நடிகர் சிங்கமுத்து, 'யு டியூப்' சேனலில் அவதுாறாக பேட்டி அளித்ததாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் கோரியிருந்தார்; அவதுாறாக பேச தடை விதிக்கவும் கோரியிருந்தார்.
இம்மனு, நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, சிங்கமுத்து பதில் அளித்து தாக்கல் செய்த மனு:
என் தனிப்பட்ட அனுபவம், சினிமாவில் உள்ளவர்களின் கருத்துகள் அடிப்படையில் கருத்துக்கள் தெரிவித்திருந்தேன். யாருக்கும் மன உளைச்சல் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை. வடிவேலுவிடம் இருந்து வழக்கறிஞர் நோட்டீஸ் வந்த உடன், அதற்கு பதில் அளித்தேன்.
அவதுாறு செய்வதாக கருதினால், வருந்துவதாகவும் குறிப்பிட்டிருந்தேன். நோட்டீசுக்கு பதில் அளித்த பின்னும், என்னை துன்புறுத்தும் விதமாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
நாங்கள் இருவரும், தமிழ் சினிமாக்களில் சேர்ந்து நடித்துள்ளோம். வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்களுக்கு, நகைச்சுவை வசனங்களை நான் எழுதி உள்ளேன். தமிழ் சினிமாவில் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னணியில் நான் இருந்தேன்.
நானும் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளேன். மற்ற நிறுவனங்களின் படங்களில் நடிக்க, வடிவேலு என்னை அனுமதிக்கவில்லை.
என் குணநலன் பற்றி, மற்ற தயாரிப்பாளர்களிடம் பொய்யான தகவலை அவர் பரப்பினார். அதன் வாயிலாக, படங்களில் நான் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அவரது வெற்றிக்கு பின்னணியில் நான் இருந்ததால், அவர் பணமும் புகழும் சம்பாதித்தார்.
சென்னை மற்றும் புறநகரில் சொத்துக்களை வாங்க, என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். அதன்படி, என் வாயிலாக, பல சொத்துக்களை அவர் வாங்கினார்.
நான், வடிவேலு உடன் இருக்கும் போது, மற்ற சிரிப்பு நடிகர்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதி தர, அவர் அனுமதிப்பது இல்லை. இருந்தாலும், மற்ற சிரிப்பு நடிகர்களுக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதி கொடுத்து உதவினேன்.
இதனால், எனக்கு எதிராக பகை உணர்வு கொண்டார். என் வாயிலாக வாங்கிய சொத்தில் வில்லங்கம் இருந்ததால், அதை பயன்படுத்தி எனக்கு எதிராக புகார்கள் அளித்தார். இந்த சொத்துக்களை வாங்கியதால், அவருக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், நான் 7 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக சித்தரித்தார்.
'யு டியூப் சேனல்' நிருபர் கேட்ட சில கேள்விகளுக்கு, நான் பதில் அளித்தேன். அதை தவறாக திரித்துள்ளார். நேர்மையான விமர்சனமாகவே பதில் அளித்திருந்தேன்.
என் பேட்டி, அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எதிர்காலத்தில் பேசுவதற்கு, பேட்டி அளிப்பதற்கு, தடை கேட்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை, வரும் 24க்கு நீதிபதி டீக்காராமன் தள்ளி வைத்துள்ளார்.