நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம்: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் வேதனை
நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம்: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் வேதனை
ADDED : அக் 29, 2025 09:18 AM

விழுப்புரம்: 'நடிகர் விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டத்தை நினைத்தால், வேதனையாக இருக்கிறது' என மா.கம்யூ., அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசினார்.
விழுப்புரத்தில் வி.சி., கட்சி சார்பில் நேற்று நடந்த பஞ்சமி நிலங்களை மீட்போம் கருத்தரங்க கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் அரசியல் தேவைக்கு ஏற்ப, கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் கூட்டணிகளை மாறி, மாறி அமைக்கிறது என்றாலும், ஜாதிய ஒடுக்குமுறைகள், பஞ்சமி நிலம் மீட்பு போன்ற மக்கள் பிரச்னைக்கு ஒன்றிணைந்து குரல் எழுப்பி வருகிறோம்.
இப்போது, புதிதாக வந்துள்ள அரசியல் தலைவருக்கு, இது போன்ற ஜாதிய ஒடுக்குமுறைகள், நில உரிமை மீட்பு பிரச்னைகள் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், அவர் வரும்போது, எதற்கென்றே தெரியாமல் அவரை பார்க்க மக்கள் திரளும், சமூக அவலம் உருவாகியுள்ளது.
அவரது, கூட்டத்தின்போது இறந்த 41 பேரின் குடும்பத்தை நேரில் சென்று பார்க்கவில்லை. ஆறுதல் சொல்லவில்லை. வடமாநிலங்களில் தான், திருவிழா கூட்டங்களில் திரண்டு, உயிர் பலிகள் நிகழ்வது நடந்து வந்தது.
தற்போது, தமிழகத்திலும் அரசியல் கூட்டத்தால் அந்தநிலை வந்துவிட்டது. இறந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து, ஆறுதல் கூறும் அரசியல் பண்பாடும் மாறியுள்ளது.
கூட்டத்தில் சிக்கி என் பிள்ளை இறந்தாலும் பரவாயில்லை, என் தலைவரை பார்த்தால் போதும் என கூறும் அளவிற்கு, தமிழக மக்களின் மனநிலை கெட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
கூட்டத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் வரவேற்றார். கம்யூ., மாவட்ட செயலர்கள் சுப்ரமணியன், சவுரிராஜன், சரவணன் முன்னிலை வகித்தனர். வி.சி., பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
நகர செயலாளர் இரணியன் நன்றி கூறினார்.

