நடிகை சரோஜா தேவி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
நடிகை சரோஜா தேவி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
ADDED : ஜூலை 16, 2025 12:25 AM

பெங்களூரு தெற்கு:'கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவியின் உடல், பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தென்னிந்திய திரையுலகில் கோலோச்சிய நடிகை சரோஜா தேவி, 87. பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் காலமானார். அவரின் இறப்புக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்ததுடன், சிலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் அஞ்சலி
முதல்வர் சித்தராமையா உட்பட தலைவர்கள் நேற்று காலை அஞ்சலி செலுத்தினர். பொது மக்கள் அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது ரசிகர்கள் வருகை தந்து, அஞ்சலி செலுத்தினர்.
பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஏற்றப்பட்டது. பெங்களூரில் இருந்து புறப்பட்ட வாகனம், பெங்களூரு தெற்கு மாவட்டம் சென்னபட்டணாவில் உள்ள அவரது சொந்த கிராமமான தஷ்வாரா கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சரோஜாதேவிக்கு விருப்பமான தோட்டத்தில், பாரம்பரிய முறைப்படி, அவரது தாயாரின் சமாதி அருகில் இறுதிச்சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பின், சரோஜா தேவி மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
துணை முதல்வர் சிவகுமார், எம்.எல்.ஏ., யோகேஸ்வர் உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பங்கேற்றனர்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் சரோஜா தேவி உடலுக்கு முதல்வர் சித்தராமையா மலர் துாவி வணங்கினார். (2வது படம்) இறுதி அஞ்சலி செலுத்த காத்திருந்த பொது மக்கள். (3வது படம்) அவரது உடலுடன் சொந்த கிராமத்துக்கு புறப்பட்ட வாகனம். (கடைசி படம்) இறுதி சடங்கில் அரசியல் பிரமுகர்கள், திரைப்பட துறையினர் பங்கேற்றனர்.