கவரைப்பேட்டை ரயில் விபத்து வழக்கில் புதிய பிரிவு சேர்ப்பு
கவரைப்பேட்டை ரயில் விபத்து வழக்கில் புதிய பிரிவு சேர்ப்பு
ADDED : அக் 21, 2024 04:35 AM

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து வழக்கில், ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில், கடந்த 11ம் தேதி இரவு 8:27 மணியளவில், லுாப் லைனில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது, பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 19 பேர் காயமடைந்தனர்.
விசாரணை
விபத்து குறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லோகோ பைலட், தொழில்நுட்ப பிரிவு, சிக்னல் பிரிவு, தண்டவாள பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.
தொடர் விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய பாக்மதி விரைவு ரயில், மெயின் லைனுக்கு பதிலாக லுாப் லைனில் மாறி சென்றதால், ஏற்கனவே அங்கு நின்ற சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டதும், ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, விபத்து நடந்த இடம் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரின் விசாரணை எல்லைக்குள் வருவதால், கவனக்குறைவாக செயல்படுதல், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
போல்டு, நட்டு
தொடர் விசாரணையில், விபத்து நடந்த இடத்தின் அருகே, மெயின் லைனில் இருந்து லுாப் லைனுக்கு ரயில் தண்டவாளம் பிரியும் இடத்தில் உள்ள கிராசிங் ஸ்விட்ச் பாயின்டில், போல்டு மற்றும் நட்டுகள் கழற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
அதனால், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், ஏற்கனவே பதிவு செய்த வழக்கில், ரயிலை கவிழ்க்க சதி என்ற, 150வது பிரிவை புதிதாக சேர்த்து விசாரித்து வருகின்றனர்.