'கருணாநிதி கனவு இல்லம்' திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
'கருணாநிதி கனவு இல்லம்' திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : டிச 18, 2024 10:19 AM

சென்னை: 'கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.995.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக 'அனைவருக்கும் வீடு' என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 'குடிசையில்லா தமிழகம்' என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரூ.995.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.
தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.