வேளாண் கூடுதல் இயக்குனர் பணியிடம் காலி பதவி உயர்வு, பணி நியமனங்கள் இழுபறி
வேளாண் கூடுதல் இயக்குனர் பணியிடம் காலி பதவி உயர்வு, பணி நியமனங்கள் இழுபறி
ADDED : நவ 12, 2024 02:41 AM
சென்னை : வேளாண் துறையில், கூடுதல் இயக்குனர் பணியிடம், ஒன்றரை ஆண்டுகளாக காலியாக இருப்பதால், பதவி உயர்வு, பணி நியமனங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளன.
வேளாண்துறை வாயிலாக, உணவு உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களின் அமலாக்கத்தை, வேளாண் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள் உள்பட, 2,000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
துறையில் காலி பணியிடங்கள் உருவாகும் போது, அவற்றை நிரப்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பின், டி.என்.பி.எஸ்.சி.,க்கு பரிந்துரை செய்யப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதுதவிர, அதிகாரிகள், அலுவலர்களுக்கு பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிர்வாக பணிகளை, நிர்வாக பிரிவு வேளாண் கூடுதல் இயக்குனர் மேற்கொள்வது வழக்கம்.
இப்பதவியில் இருந்த ஸ்ரேயா பி சிங், ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும், தமிழக மகளிர் மேம்பாட்டு திட்ட அதிகாரியாக, 2023 மே மாதம் நியமிக்கப்பட்டார்.
அதன்பின், வேளாண் கூடுதல் இயக்குனர் பணிக்கு, யாரும் நியமிக்கப்படாததால், ஒன்றரை ஆண்டுகளாக, சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் கூடுதல் இயக்குனர் அறை பூட்டியே கிடக்கிறது.
இதனால், பணி நியமனங்கள் மேற்கொள்வது, பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள், வேளாண் துறை இயக்குனரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
மத்திய, மாநில அரசு திட்டங்களின் நிதியை பெறுதல், மாவட்ட வாரியாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஆய்வு நடத்துதல் போன்ற பணிகளில், வேளாண் இயக்குனர் கவனம் செலுத்தி வருகிறார்.
எனவே, வேளாண் துறையை முழு மூச்சுடன் செயல்பட வைக்க, நிர்வாக பிரிவு கூடுதல் இயக்குனர் பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.