எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி மாணவர் சேர்க்கை மாநிலத்தில் உள்ள ஒரே அரசு கல்லுாரியிலும் நிறுத்தம்
எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி மாணவர் சேர்க்கை மாநிலத்தில் உள்ள ஒரே அரசு கல்லுாரியிலும் நிறுத்தம்
ADDED : அக் 04, 2025 08:05 PM
மதுரை:சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த, 'எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி' படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை இந்தாண்டு நிறுத்தப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும், சென்னையில் ஒரு அரசு கல்லுாரியிலும், இரண்டாண்டு கால எம்.பில்,, கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு நடத்தப்படுகிறது.
எம்.எஸ்சி., முடித்தவர்கள் இதில் சேரலாம். எம்.பில்., முடித்த பின், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியலாம்.
தனியார் கல்லுாரிகளில் கூடுதல் கட்டணத்தில் எம்.பில்., கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு படிக்க வேண்டும்.
அதிக மதிப்பெண் பெறும் ஏழை மாணவர்களின் புகலிடமாக உள்ள சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த்தான, ஐ.எம்.எச்., மூலம் ஆண்டுக்கு, 12 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதுவே குறைவு என, மாணவர்கள் ஏங்கிய நிலையில், இந்தாண்டு மருத்துவ குழுவினரின் ஆய்வை தொடர்ந்து, சிறு குறைபாடுகளை கணக்கில் கொண்டு, எம்.பில்., மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஓரிடம் போதுமா? தமிழகத்தில், 39 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ள நிலையில், சென்னையில் மட்டுமே, எம்.பில்., படிப்பு உள்ளது.
ஏற்கனவே மருத்துவ கட்டமைப்புகளை கொண்டுள்ள பழைய கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறையுடன் இப்பாடத்திட்டத்தை செயல்படுத்தினால் போதும். இப்படிப்பு முடித்தவர்கள் மனநலப்பிரிவுக்கு மட்டுமின்றி, குழந்தைகள் மருத்துவம், நரம்பியல் துறைகளிலும் தேவைப் படுகின்றனர்.
எனவே, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பில்., படிப்புகளை துவக்க அரசு முன்வர வேண்டும்.
கீழ்ப்பாக்கம் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை சரி செய்து, விரைவில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.