உதயநிதிக்கு எதிரான வழக்கு அ.தி.மு.க., பழனிசாமி பதில்
உதயநிதிக்கு எதிரான வழக்கு அ.தி.மு.க., பழனிசாமி பதில்
ADDED : மார் 16, 2024 12:45 AM
சென்னை:'அமைச்சர் உதயநிதிக்கு எதிரான அவதுாறு வழக்கை நிராகரிக்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் 'கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்த தப்பிப்பதற்காக, ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது. அந்த ஆடே காணாமல் போகும் போது, உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்து பாருங்கள்' என்று கூறியிருந்தார்.
இதனால், தன்னைப் பற்றி அவதுாறாக பேசவும், அறிக்கை வெளியிடவும் உதயநிதிக்கு தடை விதிக்கவும், 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, அமைச்சர் உதயநிதிக்கு தடை விதித்தது.
தடையை நீக்கக்கோரி, அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
உதயநிதி மனுவுக்கு பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், 'உதயநிதி பேசியது அவதுாறானதா, இல்லையா என்பது, விசாரணையின் முடிவில் தான் தெரியும். என்னை பற்றி பேசியதை, அவர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, நான் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கூடாது' என்று கூறியுள்ளார்.
இவ்வழக்கு விசாரணையை, ஏப்ரல் 5 க்கு, நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.

