அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தாக்கலானது பிரமாண பத்திரம்
அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தாக்கலானது பிரமாண பத்திரம்
ADDED : செப் 18, 2025 02:41 AM

சென்னை: ''தமிழகத்தில் தற்போது அமைச்சராக இருக்கக்கூடியவர்களுக்கு எதிராகவும், முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன.
''அதனால், அவ்வழக்குகளை சி.பி.ஐ., வசம் ஒப்படைப்பதுடன், வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்,'' என உச்ச நீதிமன்றத்தில் கருப்பையா காந்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'தமிழகத்தில் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் அல்லது சட்டசபை உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிவிட்டு, பின், விசாரணை முடிவதற்கு முன்பே, வழங்கப்பட்ட அனுமதி திரும்பபெறப்படவில்லை. வழக்கின் விசாரணை நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது' என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, விசாரணை தள்ளி வைக்கப் பட்டது.