ADDED : டிச 10, 2025 07:46 AM

சென்னை: கள்ளக்குறிச்சியில் நடப்பதாக அரசாணை வெளியிடப்பட்ட, அரசின் வேளாண் கண்காட்சி திருவண்ணாமலைக்கு இடமாற்றப்பட்டு உள்ளது.
நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளவும், விவசாயிகள் உற்பத்தி செய்த மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யவும், வேளாண் துறை வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவற்றில் நடக்கும் கருத்தரங்குகள் வாயிலாக, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படுகிறது. நடப்பாண்டு வேளாண் பட்ஜெட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் வணிக கண்காட்சி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதற்கு பதிலாக, சென்னை வர்த்தக மையத்தில், செப்டம்பர் மாதம் கண்காட்சி நடத்தப்பட்டது.
இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வேளாண் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில், வரும், 27 மற்றும் 28ம் தேதிகளில் நடத்த ஏற்பாடுகள் துவங்கிஉள்ளன.

