பருப்பு வகைகள் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறை தீவிரம்
பருப்பு வகைகள் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறை தீவிரம்
ADDED : அக் 21, 2024 04:33 AM

சென்னை : பருப்பு வகைகள் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பச்சை பருப்பு, தட்டை பயறு, கொள்ளு, மொச்சை உள்ளிட்ட பருப்பு வகைகள் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் 20 லட்சம் ஏக்கரில், 5.22 லட்சம் டன் பருப்பு ரகங்கள் உற்பத்தியாகின்றன. ஆனாலும், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லை.
இறக்குமதி
எனவே, மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்ய, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
ரேஷனில் மானிய விலையில் வழங்க, துவரம் பருப்பு ரகத்தைச் சேர்ந்த கனடியன் மஞ்சள் பருப்பு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தேவை அதிகம் உள்ள நிலையில், பருப்பு வகைகளை சாகுடி செய்தால், விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும்.
மேலும், பருப்பு பயிர்கள், காற்றில் உள்ள நைட்ரஜன் சத்துக்களை கிரகித்து, வேர்கள் வழியாக மண்ணின் வளத்தை பெருக்க உதவுகின்றன. எனவே, பருப்பு உற்பத்தியை நடப்பாண்டு அதிகரிக்க, வேளாண் துறை முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பருப்பு வகைகள் பெருக்கு திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு 138 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதன் வாயிலாக, 4.76 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். நடப்பாண்டு பருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், 10.80 கோடி ரூபாய் செலவில், மத்திய, மாநில அரசுகள் நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
பாசன பற்றாக்குறை
எனவே, துவரம் பருப்பு சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கத்திற்கு, 17.5 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கி உள்ளது. ஊட்டத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் உற்பத்திக்கு, 35.3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடைக்கு பின், பாசன பற்றாக்குறை உள்ள நிலங்களில், பருப்பு பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க, 3.35 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. இவற்றின் வாயிலாக 1 லட்சம் ஏக்கர் வரை, பருப்பு சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.