ADDED : ஏப் 11, 2025 08:29 PM

சென்னை: ''மும்மொழிக் கொள்கை, தமிழகத்திற்கான நிதி, வக்ப் சட்டம், நீட் சட்டம் உள்ளிட்டவற்றில் அதி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன,'' என தி.மு.க., எம்.பி., கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர்பாக கனிமொழி கூறியதாவது: ஒரு போதும் பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது. கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொன்ன இ.பி.எஸ்., இருக்கும் மேடையில், பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை அமித்ஷா அறிவித்து உள்ளார். பா.ஜ.,வின் பல்வேறு மசோதாக்கள், திட்டங்களை எதிர்ப்பதாக சொல்லும் இ.பி.எஸ்., மவுனமாக அமர்ந்து கூட்டணியை ஏற்றுக் கொள்வதை பார்க்க முடிகிறது. இது தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் செய்த துரோகமாகும்.
இருவரும் பிரிந்து விட்டதாக சொன்னாலும், தொடர்பில் இருக்கிறார்கள் என ஸ்டாலின் கூறியது உண்மை ஆகி உள்ளது. வெகு நாட்கள் மக்களை ஏமாற்ற முடியாமல் கூட்டணியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
காசி தமிழ் சங்கமம் மூலம், காசிக்கு தமிழ் சென்றடைந்துள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், தமிழ் எப்படி வளரும் என தெரியவில்லை. தமிழுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுக்க தமிழ் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காத ஆட்சி என்ன செய்துவிட முடியும்.
எங்காவது செல்லும் போதும் பிரதமர் திருக்குறளை சொல்வதும், நிதியமைச்சர் திருக்குறளை மேற்கோள் காட்டுவதும் தமிழை வளர்க்கும் முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழுக்காக என்ன செய்துள்ளனர். ஹிந்தியை திணிப்பதை தவிர தமிழுக்கு எதுவும் செய்தது கிடையாது.
மும்மொழிக் கொள்கை, தமிழகத்திற்கான நிதி, வக்ப் சட்டம், நீட் சட்டம் உள்ளிட்டவற்றில் அதி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன. சமீபத்தில் தான் சிறுபான்மையினரோடு நிற்போம் என இ.பி.எஸ்., கூறினார். ஆனால், வக்ப் மசோதாவை நிறைவேற்றியவருடன் மேடையில் அமர்ந்துள்ளார். அண்ணாதுரை, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய தலைவரோடு மேடையில் அமர்ந்து கொண்டு கூட்டணியை யாரோ ஒருவர் அறிவிக்க, இவர் அமைதியாக கேட்டுக் கொண்டு உள்ளார்.
யார் தலைமையில் கூட்டணி அமைகிறதோ அவர்கள் தான் அறிவிப்பார்கள் பேசுவார்கள். பேசக்கூடிய உரிமை கூட அவருக்கு இல்லா நிலையில் கூட்டணி அறிவிக்கப்படுகிறது. தங்கள் தலைவர்களை இழிவாக பேசக்கூடிய தலைவரோடு அந்த மேடையில் அமர்ந்து கூட்டணி ஏற்றுக் கொள்கிறார். அதே தலைவரை வீட்டிற்கு அழைத்து விருந்து அளிக்கிறார். இது கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் செய்த துரோகம். மக்கள் தகுந்த பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். இவ்வாறு கனிமொழி கூறினார்

