ஒற்றுமை இல்லாத அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஒரு தொகுதியில் கூட டிபாசிட் பெறாது: உதயநிதி
ஒற்றுமை இல்லாத அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஒரு தொகுதியில் கூட டிபாசிட் பெறாது: உதயநிதி
ADDED : ஜூலை 14, 2025 01:28 AM

தி.மலை: ''அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. இது மாதிரி போட்டி போட்டுக் கொண்டிருந்தால், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட டிபாசிட் பெறாது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில், 41 தொகுதிகளை சேர்ந்த பாக முகவர்கள், மாவட்ட நிர்வாகிகள், 13,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பயிற்சி கூட்டம், திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் வேலு, காந்தி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
மத்திய பா.ஜ., அரசு, தமிழக மக்களுக்கும், அரசுக்கும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. புதிய கல்வி கொள்கை மூலம் மறைமுகமாக ஹிந்தி திணிப்பை தமிழகத்தில் திணிக்க பார்க்கின்றனர்.
'ஓரணியில் தமிழ்நாடு'
லோக்சபா தொகுதியையும் குறைக்க பார்க்கின்றனர். தமிழகத்தின் நிதி உரிமையை குறைக்கும் வேலையை தொடர்ந்து, பா.ஜ., அரசு செய்து வருகிறது.
'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கிண்டல் செய்கிறார். தேர்தல் வந்தவுடன் தி.மு.க.,வினர் தமிழகத்தில் வீட்டின் கதவை எல்லாம் தட்டுறாங்க என்கிறார். நாம் மக்களின் கதவை உரிமையோடு தட்டுகிறோம். உங்களை மாதிரி அமித்ஷா வீட்டு கதவையோ, கமலாலய கதவையோ யாரும் தட்டவில்லை.
பா.ஜ.,வோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என்று கூறி விட்டு, அடுத்த மாதமே நான்கு காரில் மாறி சென்று பழனிசாமி கள்ளக்கூட்டணி வைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் அமித்ஷா, 'கூட்டணி ஆட்சி தான்' என்கிறார். பழனிசாமி தனித்து ஆட்சி தான் என்று கூறுகிறார். ஒற்றுமை இல்லாமல் இதுமாதிரி போட்டி போட்டு கொண்டிருந்தால், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட டிபாசிட் வாங்காது அக்கூட்டணி.
அண்ணாதுரை பெயரில் கட்சியை வைத்து கொண்டு, சுய நலத்திற்கு அமித்ஷாவிடம் மொத்தமாக அடமானம் வைத்து விட்ட பழனிசாமியை பார்த்து, ஒட்டு மொத்த தமிழக மக்களும் சிரிக்கின்றனர். பிரசாரத்தை வெள்ளை சட்டை, வேட்டியோடு ஆரம்பித்தார். இன்று காவி சாயத்தோடு உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.900 கோடி
திருவண்ணாமலையில், தி.மு.க.,வைச் சேர்ந்த, அமைச்சர் வேலு குடும்ப திருமண விழாவில் நேற்று பங்கேற்ற, துணை முதல்வர் உதயநிதி, மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:
வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெண்கள், இன்று விண்வெளிக்கு பயணம் செய்கின்றனர். தமிழக முதல்-வராக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தை, மகளிர் இலவச பஸ் பயணத்திற்காக ஸ்டாலின் போட்டார்.
இதன் மூலம் மாதம், 900 கோடி ரூபாய் மகளிர் சேமிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கு பக்கபலமாக எப்படி இருக்கிறாரோ, அதேபோல் மகளிர், அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

