கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் அ.தி.மு.க., பலமான கட்சி
கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் அ.தி.மு.க., பலமான கட்சி
ADDED : ஜூலை 11, 2025 05:31 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நேற்று இரவு, அ.தி.மு.க., சார்பில் நடந்த 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்தில், பொதுச் செயலாளர் பழனிச்சாமி, ரோடு ஷோ நடத்தினார்.
மாவட்ட செயலாளர் சண்முகம், அர்ஜூனன் எம்.எல்.ஏ., பங்கேற்றனர். தொடர்ந்து, அங்காளம்மன் கோவில் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
மக்கள் செல்வாக்கை இழந்து, வீடு வீடாக கதவை தட்டி, தி.மு.க.,வில் உறுப்பினர்களை சேர்ப்பது போல், அ.தி.மு.க., கேவலமாக போகவில்லை. நான்கு ஆண்டுகள் மக்களை ஏமாற்றி, தேர்தல் வரும் நேரத்தில், தேர்தலை மையமாக வைத்து, அரசு பணத்தை வைத்து, கட்சியை வளர்க்க வீடு வீடாக வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக கும்பகர்ணன்போல் துாங்கிவிட்டு, தேர்தல் வந்துவிட்டதால் மக்களை சந்திக்க வருகின்றனர்.
பா.ஜ.,விடமிருந்து அ.தி.மு.க., என்ற கட்சியை காப்பாற்றுங்க என்று ஸ்டாலின் சொல்கிறார். அ.தி.மு.க.,என்ற தொண்டர் நிறைந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. நாங்கள் சொந்த காலில் நின்று கட்சி நடத்துகிறோம். யாருடைய தயவும் அ.தி.மு.க.,விற்கு தேவையில்லை. தி.மு.க.,தான் கூட்டணியை நம்பி இருக்கிறது. கூட்டணி இல்லை என்றால் தி.மு.க.,கிடையாது.
கூட்டணி இருந்தாலும் இல்லையென்றாலும் அ.தி.மு.க., பலமான கட்சி. தி.மு.க,,வில் கூட்டணி கட்சிகள் எல்லாம் அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் யாரும் குறை சொல்லாத அளவில் நடத்தினோம். தி.மு.க.,ஆட்சியில் சிறுமி முதல் கிழவி வரை பாதுகாப்பு இல்லை. தி.மு.க., வில் பாதி அமைச்சர்களுக்கு துாக்கம் இல்லை. அமலாக்கத்துறை எப்போது வரும் என்ற பயத்தில் உள்ளனர்.
உங்கள் குடும்பத்தில் பிறந்த உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கின்றீர்கள். தமிழகத்தில் நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ.,வாக இருக்கும் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தீர்களா.
இவ்வாறு அவர் பேசினார்.