பழனிசாமி பேச்சை திசை திருப்பியது தி.மு.க., முறியடிக்க தயாராகும் அ.தி.மு.க., - ஐ.டி., அணி
பழனிசாமி பேச்சை திசை திருப்பியது தி.மு.க., முறியடிக்க தயாராகும் அ.தி.மு.க., - ஐ.டி., அணி
ADDED : ஜூலை 12, 2025 03:05 AM
சென்னை:கோவில் நிதி பற்றிய தனது பேச்சை திசை திருப்பும் வகையில், தி.மு.க., மேற்கொண்டு வரும் பிரசாரத்தை முறியடிக்க, அ.தி.மு.க., நிர்வாகிகள், ஐ.டி., அணிக்கு, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், ஆளும் தி.மு.க.,வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. ஜூலை 1 முதல், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற, உறுப்பினர் சேர்க்கை, பிரசார இயக்கத்தை, தி.மு.க., நடத்தி வருகிறது.
சதிச் செயல்
எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி, கடந்த 7ம் தேதி முதல், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 8ம் தேதி, கோவையில் நடந்த பிரசார பயணத்தில் பேசிய பழனிசாமி, 'கோவிலைக் கண்டாலே சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. கோவில் கட்டுவதற்காக, தெய்வ பக்தி கொண்டவர்கள் உண்டியலில் பணம் போடுகின்றனர். அந்த பணத்தில் கல்லுாரி கட்டுகின்றனர்.
'இது எந்த விதத்தில் நியாயம்? இவை அனைத்தையும் சதிச் செயலாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. அரசு பணத்தில் இருந்தே கல்லுாரி கட்டலாம். அரசிடம் பணம் இல்லை என்றால், இந்த அரசு நமக்கு தேவையா?' என்றார்.
அ.தி.மு.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தி.மு.க., அரசின் தோல்விகளை, தவறுகளை பேசி, அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும்தான் பழனிசாமி, பிரசார பயணம் மேற்கோண்டுள்ளார்.
ஆனால், கோவில் நிதி பற்றிய அவரது பேச்சை கடுமையாக விமர்சித்த தி.மு.க.,வினர், 'கோவில் நிதியில் கல்லுாரி கட்டுவது எப்போதும் நடப்பதுதான். அப்படியெனில், கல்லுாரி கூடாது என்கிறாரா பழனிசாமி?' என, தி.மு.க.,வினர் எதிர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆலோசனை
பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 'இதுவரை பா.ஜ.,வுக்கு டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டிருந்த பழனிசாமி, ஒரிஜினல் வாய்ஸாக மாறி விட்டார்' என்று விமர்சித்தார். பழனிசாமியை கண்டித்து, வரும் 14ம் தேதி தமிழகம் முழுதும் போராட்டம் நடத்த, தி.மு.க., மாணவரணி முடிவு செய்துள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில், கோவில் நிதியில் கட்டப்பட்ட கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், பள்ளிகள் முன் நின்று, 'இதுவெல்லாம் சதிச் செயலா?' என, சமூக வலைதளங்களில் தி.மு.க., - ஐ.டி., அணியினர் பதிவிட்டு வருகின்றனர்.
தி.மு.க.,வுக்கு எதிரான பழனிசாமியின் பேச்சை, அவருக்கு எதிராக தி.மு.க., திருப்பி விட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத பழனிசாமி, நேற்று முன்தினம் விழுப்புரத்தில் பேசும்போது, 'அரசு கல்லுாரிகள் வேண்டும் என்று நான் சொன்னதற்கு கண், காது, மூக்கு வைத்து, இரண்டு நாட்களாக விவாதம் நடக்கிறது' என்றார்.
அதைத் தொடர்ந்து, கோவில் நிதி பற்றிய தி.மு.க., பிரசாரத்தை முறியடிக்க, அ.தி.மு.க., - ஐ.டி., அணிக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என, மூத்த தலைவர்களிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர் ஐ.டி., அணியினர்.
அதேநேரம் இதுபோன்ற பிரச்னைகளை பேசும்போது கவனத்துடன் இருக்க, பழனிசாமி முடிவு செய்துள்ளதாகவும், அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.