டங்ஸ்டன் திட்டத்திற்கு காரணம் அ.தி.மு.க.,வே: தங்கம் தென்னரசு
டங்ஸ்டன் திட்டத்திற்கு காரணம் அ.தி.மு.க.,வே: தங்கம் தென்னரசு
ADDED : ஜன 09, 2025 05:52 AM
சென்னை : சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா: மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு விவசாயிகளும், பொது மக்களும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக, மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை, தமிழக அரசு போக்க வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: அரிய வகை கனிம வளங்களை ஏலம் விடும் அதிகாரத்தை, மத்திய அரசுக்கு அளிக்கும் கனிமவள திருத்த சட்டத்தை, ராஜ்யசபாவில் அ.தி.மு.க., ஆதரித்தது.
இச்சட்டத்தால் மாநிலங்களிடம் இருந்து கனிமவள உரிமை பறிக்கப்பட்டதால்தான், டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்துள்ளது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார்: 38 தி.மு.க., - எம்.பி.,க்கள் இருந்தும் தடுக்க முடியாததை, ஒரு அ.தி.மு.க., - எம்.பி., தடுக்க முடியுமா?
முதல்வர் ஸ்டாலின்: ராஜ்யசபாவில் கனிமவள திருத்த சட்டத்தை ஆதரித்து, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசினார். இதற்கான ஆதாரம் உள்ளது. இதை மறுத்தால், நீங்கள் ஆதாரத்தை கொடுங்கள்.
உதயகுமார்: அரிய வகை கனிம வளங்களை ஏலம் விடும் முறையைதான், ராஜ்யசபாவில் அ.தி.மு.க., ஆதரித்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: அரிய வகை கனிம வளங்களை ஏலம் விடும் உரிமையை, மத்திய அரசுக்கு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மாநில உரிமையை பறிக்கும் அந்த சட்டத்தை, அ.தி.மு.க., ஆதரித்ததன் விளைவுதான், இப்போது டங்ஸ்டன் சுரங்கமாக வந்திருக்கிறது.
ஸ்டாலின் முதல்வராக இருக்கும் வரை, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.