அ.தி.மு.க., அரசு வாங்கிய6.28 லட்சம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு48,000 கோடி வட்டி செலுத்துகிறோம் அமைச்சர் வேலு புள்ளிவிபரம்
அ.தி.மு.க., அரசு வாங்கிய6.28 லட்சம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு48,000 கோடி வட்டி செலுத்துகிறோம் அமைச்சர் வேலு புள்ளிவிபரம்
ADDED : ஜன 10, 2025 11:44 PM
சென்னை:“அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய, 6.28 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு, ஆண்டுதோறும் 48,000 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படுகிறது. புதிய திட்டங்களுக்கு கடன் வாங்கித்தான் ஆக வேண்டும்,” என, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
ஜெயசீலன்: தமிழகத்திற்கு, 2024 - 25ம் நிதியாண்டில், 1.55 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஒட்டுமொத்த கடன் 8.33 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் 4.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் இரட்டிப்பாகி விட்டது. மக்கள் தலையில் கடன் சுமை ஏற்றப்படுகிறது.
அமைச்சர் வேலு: அ.தி.மு.க., ஆட்சியில், 6.28 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து சென்றனர். இதற்காக, ஆண்டுக்கு 48,000 கோடி ரூபாய் வட்டி செலுத்தும் நிலை அரசுக்கு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த, 11 திட்டங்கள் புதிதாக நிறைவேற்றப்படுகின்றன.
முந்தைய சட்டசபை கூட்டத்தில், மகளிர் உரிமை தொகையை எப்போது தருவீர்கள் என்று தொடர்ந்து கேட்டனர். இப்போது, 1.20 கோடி மகளிருக்கு மாதம் தலா 1,000 ரூபாய் தரப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிய திட்டங்களுக்கு கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். எனவே, 8 லட்சம் கோடி ரூபாயில், 6.28 லட்சம் கோடி ரூபாய் கடன், அ.தி.மு.க., வைத்து சென்றது தான்.
இவ்வாறு விவாதம் நடந்தது.