ஸ்டாலின் திறந்த மருத்துவமனை வேலுாரில் ஒரே வாரத்தில் மூடல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ஸ்டாலின் திறந்த மருத்துவமனை வேலுாரில் ஒரே வாரத்தில் மூடல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:43 AM
சென்னை: 'வேலுார் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டு, ஒரு வாரத்தில் மூடப்பட்ட நிலையில், அதை உடனடியாக திறக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில் வரும் 8ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மருத்துவமனைகள், கல்வி நிலையங்களை உருவாக்கும்போது, அவை முழுமையான பயன்பாட்டிற்கு உகந்த வகையில் கட்டப்பட்டுள்ளதா; தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து தான் திறப்பு விழா நடத்த வேண்டும்.
'அதிசயம், ஆனால் உண்மை' என்பது போல், கடந்த ஜூன் 25ம் தேதி, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்ட வேலுார் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, ஒரு வாரத்தில் மூடப்பட்டுள்ளது.
ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான அரசு மருத்துவமனையை, விளையாட்டு பிள்ளைகளின் மைதானம் போல் நினைத்து, தி.மு.க., அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
வேலுார் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மீண்டும் திறக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், வரும் 8ம் தேதி, வேலுார் அண்ணா கலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.