பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் கோரிக்கை
பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் கோரிக்கை
ADDED : ஏப் 09, 2025 01:55 AM
''கூட்டுறவு சங்க தேர்தலில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ. அசோக்குமார் கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., அசோக்குமார்: நெல் கொள்முதல் செய்வதை, மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கி விட்டால், எதிர்காலத்தில் நெல் அரவை ஆலைகளுக்கு, நெல் கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
அமைச்சர் சக்கரபாணி: கடந்த, 2016 முதல் 2021 வரை, அ.தி.மு.க., ஆட்சியில், காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் வாயிலாகவே, நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
அதையே, தி.மு.க., அரசும் பின்பற்றி வருகிறது. நெல் அரவை ஆலைகளுக்கு, நெல் கிடைப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே, அரசின் நடவடிக்கை இருக்கும்.
அசோக்குமார்: ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை, கொள்முதல் நிலையங்களில் வாங்குவதில்லை. இதனால், தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அமைச்சர் சக்கரபாணி: நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. கடந்த ஆண்டு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஈரப்பதத்தை, 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இந்த ஆண்டு தமிழக அரசு வலியுறுத்தியும், மத்திய அரசு ஏற்கவில்லை.
ஆனாலும், விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகளிடம் இருந்து நெல்லை, தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது.
அசோக்குமார்: கிருஷ்ணகிரியில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்ய, 200 கோடி ரூபாய் தேவை. 100 கோடி ரூபாயாவது கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அனைத்து பொதுவினியோக திட்டப் பணியாளர்களையும் ஒன்றிணைத்து, பொது வினியோகத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

