'நீட்' தேர்வுக்கான அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்காது: பழனிசாமி அறிவிப்பு
'நீட்' தேர்வுக்கான அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்காது: பழனிசாமி அறிவிப்பு
ADDED : ஏப் 08, 2025 08:16 PM
சென்னை:மருத்துவ படிப்புக்கான, 'நீட் தேர்வு தொடர்பாக, இன்று நடக்கவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., பங்கேற்காது' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, துணை முதல்வர் உதயநிதி, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், முதல் கையெழுத்தில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும்' என்று, மேடைதோறும் பேசினார். அதை நம்பி, மக்கள் தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். ஆனால், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதை தவிர, வேறு எதுவும் செய்யவில்லை.
இது பற்றி சட்டசபையில் கேட்டபோது, 'நீட் தேர்வை மத்திய அரசால் தான் ரத்து செய்ய முடியும். மாநில அரசால் முடியாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதை மறைத்து, 2021 சட்டசபை தேர்தலின்போது பொய்யான வாக்குறுதி அளித்து, மாணவர்களையும் பெற்றோர்களையும் தி.மு.க., ஏமாற்றியது.
இதற்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும். 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், குழு அமைப்பது, அறிக்கை விடுவது, அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவது, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது என, நாடகம் நடத்துகிறது.
நீட் தொடர்பான தமிழகத்தின் சட்ட மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை என்றும்; நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்படியெனில், அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி என்ன முடிவு எடுக்க முடியும்?
கடந்த 6ம் தேதி, ஊட்டியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தால்தான், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்போம் என, அ.தி.மு.க., நிபந்தனை விதிக்கத் தயாரா?' என, கேட்டுள்ளார்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டாவிட்டால்தான், தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி என்றும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடி வரை உயர்த்தினால்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்றும், முதல்வர் ஸ்டாலின் நிபந்தனை விதிக்கத் தயாரா?
நான்காண்டுகள் ஆகியும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால், தி.மு.க., மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளனர். இதனால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை; வழக்கம்போல் இதுவும் ஒரு நாடகம்.
எனவே, இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

