அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்?
அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம்?
ADDED : ஜன 09, 2025 07:28 PM
சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தேவையான அரசியல் வியூகங்களை வகுத்து தர, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன், அ.தி.மு.க., ஒப்பந்தம் செய்ய உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தொடர்ந்து பத்து தேர்தல்களில், அ.தி.மு.க., தோல்வி அடைந்து வருகிறது. பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் எண்ணமும், பொதுச்செயலர் பழனிசாமியிடம் இல்லை. வரும் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் பழனிசாமியும், அ.தி.மு.க,வும் உள்ளது.
எங்கள் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அக்கட்சி தனித்து போட்டியிடும் என, திட்டவட்டமாக அறிவித்து விட்டது. அதேபோல, நடிகர் விஜய் கட்சியும் வருமா, வராதா என்பது தெரியவில்லை. அக்கட்சி தலைமையில் தனி அணி அமைக்கப்பட்டால், அது அ.தி.மு.க.,வுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
எனவே, சட்டசபை தேர்தலை எவ்வாறு சந்திப்பது, எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேருவது என்பது குறித்த ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. எனவே, பிரபல வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம், இதுபற்றி கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் பேச்சு நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில், இந்த பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகத்தை வைத்து தி.மு.க., வெற்றி பெற்றிருப்பதால், இம்முறை அ.தி.மு.க., பக்கம் அவரை கொண்டு வர, தலைமையில் இருந்து தீவிரமாக முயற்சி எடுத்துள்ளனர்.
அநேகமாக, தை மாதத்தில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

