திறந்தநிலை பள்ளி சான்றிதழ் கல்லுாரிகளில் சேர தகுதியானது ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பு
திறந்தநிலை பள்ளி சான்றிதழ் கல்லுாரிகளில் சேர தகுதியானது ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பு
ADDED : அக் 25, 2025 07:49 PM
சென்னை: 'திறந்தநிலை பள்ளி சான்றிதழ், கல்லுாரிகளில் சேர தகுதியானது' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள், என்.ஐ.ஓ.எஸ்., எனும், தேசிய திறந்த நிலை பள்ளியில் படித்த மாணவ -- மாணவியரை, உயர்கல்வியில் சேர்க்க அனுமதி மறுப்பதாக புகார்கள் வருகின்றன. தேசிய திறந்த நிலை பள்ளியானது, மத்திய கல்வி துறையின் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும்.
இதில், படித்து தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியர், அனைத்து பல்கலை, இன்ஜினியரிங் மற்றும் இன்னும் பிற படிப்புகளில் சேர தகுதியுடையவர்கள்.
தேசிய திறந்த நிலை பள்ளியில் படித்த மாணவ - மாணவியரின் சான்றிதழை நிராகரிப்பது, கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிரானது.
எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தேசிய திறந்த நிலை பள்ளியில் படித்து, தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப உயர்கல்வி சேர்க்கை வழங்க வேண்டும். தேசிய திறந்தநிலை பள்ளி சான்றிதழ், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு தகுதியானதே.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

