அறுவடை செய்யப்படாத 3.45 லட்சம் ஏக்கர் மழை கொட்டுவதால் விவசாயிகள் கவலை
அறுவடை செய்யப்படாத 3.45 லட்சம் ஏக்கர் மழை கொட்டுவதால் விவசாயிகள் கவலை
ADDED : அக் 25, 2025 07:50 PM
சென்னை: மழை கொட்டுவதால், பல்வேறு மாவட்டங்களில், 3.45 லட்சம் ஏக்கர் பயிரிடப்பட்ட நெல்லை, அறுவடை செய்ய முடியாததால், விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு, 6.50 லட்சம் ஏக்கரிலும், மற்ற மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி நடந்துள்ளது.
இவற்றின் அறுவடை, செப்டம்பர் மாதம் துவங்கி நடந்து வருகிறது. கடந்த, 50 ஆண்டுகளுக்கு பின், இப்பருவத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தியாகி உள்ளது.
தனியார் நெல் கொள்முதல் செய்யாத காரணத்தால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நோக்கி, விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர்.
அரசு வாயிலாக, 1,850க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டாலும், அங்கு கோணி பைகள், சணல், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவியது.
அத்துடன், கொள்முதல் செய்த நெல்லை, அரவை மில்லுக்கு எடுத்துச் செல்வ தற்கு போதுமான லாரிகள் இல்லை. செறிவூட்டப்பட்ட அரிசி கலப்பதற்கு தேவையான அனுமதியை, மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆலைகளில் அரவை செய்யப்படாமல், நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதை காரணம் காட்டி, நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை துவங்கியதால், கொள்முதல் மையங்களுக்கு வெளியே காத்திருந்த நெல் மூட்டைகள், முளைக்க துவங்கியுள்ளன. தற்போது, அரசின் நடவடிக்கையால், கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
அதே நேரத்தில், அறுவடை செய்வதற்காக, 3.45 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிர்கள் காத்திருக்கின்றன. மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துஉள்ளனர்.
குறித்த நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால், ஒரு ஏக்கருக்கு 2.50 டன் வீதம், பல ஆயிரம் டன் நெல் வீணாகும் நிலை உருவாகி உள்ளது. பாதிப்பு இல்லாமல், அறுவடை பணிகளை மேற்கொள்ள, அரசு உதவ வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

