UPDATED : அக் 07, 2026 06:37 PM
ADDED : அக் 07, 2026 06:07 PM
சென்னை: ‘உயர்த்தப்பட்ட அடிப்படை ஊதியத்தை, உடனடியாக வழங்க வலியுறுத்தி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சிவானந்தா சாலையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து, சங்கச் செயலர் பூமிநாத பாண்டியன் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு, அடிப்படை ஊதிய உயர்வை வழங்கியுள்ளன. இந்த ஊதிய உயர்வை, மே 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
அந்த அடிப்படை ஊதிய உயர்வை, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாதம்தோறும் 1ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பின், கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக, அரசு தரப்பில் உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
