ஓட்டலாக மாறும் விமானம்: மபி சகோதரர்களின் பலே ஐடியா
ஓட்டலாக மாறும் விமானம்: மபி சகோதரர்களின் பலே ஐடியா
UPDATED : அக் 16, 2025 08:57 PM
ADDED : அக் 16, 2025 07:14 PM

உஜ்ஜயின்: மத்திய பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர், பிஎஸ்எப் படையின் பழைய விமானத்தை ஏலத்தில் எடுத்து அதனை மக்கள் தங்கி செல்லும் வகையில் ஓட்டலாக மாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ம.பி.,யின் உஜ்ஜயின் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வீரேந்திர குஷ்வாஹா மற்றும் புஷ்பேந்திர குஷ்வாஹா. இவர்கள் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் நடந்த ஏலத்தில் பிஎஸ்எப் படைக்கு சொந்தமான AVERO VT EAV plane விமானத்தை ரூ.40 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியுள்ளனர். இதற்கு முன்னர் அவர்கள் ராணுவத்துக்கு சொந்தமான பழைய உதிரி பாகங்களை வாங்கியிருந்தாலும், விமானத்தை வாங்குவது இது தான் முதல் முறையாகும். அப்படி வாங்கும் பொருட்களை உடனடியாக விற்கும் இவர்கள், இந்த முறை மாற்றி யோசித்தனர்.
அதில் புதுமையை புகுத்தி வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவது என முடிவெடுத்தனர். இந்த பெரிய விமானத்தை ஓட்டலாக மாற்ற திட்டமிட்ட அவர்கள் அதனை தங்களின் சொந்த மாவட்டத்துக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இன்னும் இரண்டு நாட்களில் அந்த விமானம் உஜ்ஜயின் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு அந்த விமானத்தில் மக்கள் வந்து தங்கி செல்லும் வகையில் 5 சொகுசு அறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். விமானத்தில் தங்கும் உணர்வு மக்களுக்கு கிடைக்கும் வகையில், இந்த விமானத்தில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள அவர்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கும், போட்டோ ஷூட்டுக்கும் வாடகைக்கு விடவும் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் இந்த புது ஐடியாவை கேள்விப்பட்ட பலர் அதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.