கவர்னர் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமாகின தமிழக அரசிதழில் வெளியீடு
கவர்னர் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமாகின தமிழக அரசிதழில் வெளியீடு
ADDED : ஏப் 13, 2025 01:51 AM

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, கவர்னர் ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பல்கலைகள் தொடர்பான, 10 மசோதாக்கள் சட்டமாகி உள்ளன.
பல்கலைகள் அதிகாரம் தொடர்பாக, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பட்ட 10 மசோதாக்கள் மீது, எந்த முடிவும் எடுக்காமல் கவர்னர் ரவி கிடப்பில் வைத்திருந்தார். பின், அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'கவர்னர் ரவியின் செயல் சட்ட விரோதமானது. அவரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படும்' என்று, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.
அதன்படி, கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் சட்டமாகி உள்ளதாக, அரசிதழில் தமிழக அரசு அதன் விபரங்களை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
கடந்த 2022ம் ஆண்டு தமிழக பல்கலைகள் திருத்த சட்ட மசோதா, 2022 அக்டோபர் 19ல், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட கவர்னரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கு ஒப்புதல் அளிக்க, 2023 நவம்பர் 13ல் கவர்னர் மறுத்தார். அதனால், அந்த மசோதா, 2023 நவம்பர் 18ல் சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை அவர், நவம்பர் 28ல் ஜனாதிபதிக்கு அனுப்பினார்.
இது உட்பட 10 மசோதாக்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2023 நவம்பர் 18ல் கவர்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.
இவ்வாறு அரசிதழில் கூறப்பட்டுள்ளது.
கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் சட்டமாகியுள்ளதால், பல்கலைகள் தொடர்பாக கவர்னரிடம் இருந்த அதிகாரங்கள், தமிழக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன.