அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்பு அனைத்துக்கும் ஆகஸ்டுக்குள் ஜி.ஓ., வெ ளியிட கெடு
அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்பு அனைத்துக்கும் ஆகஸ்டுக்குள் ஜி.ஓ., வெ ளியிட கெடு
ADDED : மே 18, 2025 01:44 AM

சென்னை:தமிழக அரசின் பட்ஜெட், மார்ச், 14ல் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அம்மாதம், 24ம் தேதி முதல், ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
மானிய கோரிக்கையின்போது பேசிய அமைச்சர்கள், தங்கள் துறையில் இந்தாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அந்த பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களை, அரசு அறிவுறுத்திஉள்ளது.
அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
அடுத்த ஆண்டு ஏப்., அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வரும் என்பதால், ஒன்றரை மாதங்களுக்கு மேல் அரசு பணிகள் முடங்கும்.
முன்னதாக, நவம்பர், டிசம்பரில் மழைக் காலம் என்பதால், பேரிடர் நிவாரண பணிகளில் தான் பலரும் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.
எனவே, இந்தாண்டு மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அமைச்சர்கள் அறிவித்த அறிவிப்புகளை விரைந்து செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மொத்த அறிவிப்புகளில், அரசிடம் அனுமதி பெற வேண்டிய பணிகளுக்கு, விரைவில் அதுகுறித்த அறிக்கையை துறை செயலர்களுக்கு அனுப்பி, நிதித் துறை, முதல்வர் ஒப்புதல் பெற்று, வரும் ஆகஸ்டுக்குள் அரசாணைகள் வெளியிட வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், துறை தலைவர்களே ஒப்புதல் அளிக்கக்கூடிய பணிகளுக்கு, சக அதிகாரிகளுடன் ஆலோசித்து, அவற்றை விரைவாக துவங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு வட்டாரங்கள் கூறின.