வௌ்ளத்தால் சேதமான வீடுகளை புனரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு
வௌ்ளத்தால் சேதமான வீடுகளை புனரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு
ADDED : பிப் 21, 2024 03:29 AM
சென்னை :' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, ஏழு மாவட்டங்களில், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய வீடுகள் கட்டி கொடுக்கவும், பகுதி சேதமடைந்த வீடுகளை புனரமைக்கவும், 382.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெள்ளத்தால், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில், 4,577 வீடுகள் முழுமையாகவும், 9,975 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன.
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்ட, 4 லட்சம் ரூபாய்; பகுதி சேதமடைந்த வீடுகளை புனரமைக்க, 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரின் கருத்துரை அடிப்படையில், 4,577 வீடுகள் கட்ட, தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 183.08 கோடி; பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 199.50 கோடி என, மொத்தம், 382.58 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். இவ்வீடுகளை கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

