ADDED : மார் 09, 2024 01:37 AM
சென்னை:சித்த மருத்துவ கல்லுாரி உட்கட்டமைப்பு வசதி, உயர் சிறப்பு பல் மருத்துவ மையங்கள் கட்டமைப்புக்கு, 40.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தினமும் 600 முதல் 700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, 35.63 கோடி ரூபாய் மதிப்பில், புறநோயாளிகள் கட்டடம், ஆண்கள் விடுதி கட்டடம், கல்விசார் கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது.
வாய் மற்றும் பல் தொடர்பான பல்நோக்கு மருத்துவ சிகிச்சை மையங்கள் குறைவாக இருப்பதால், சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளது. இவை நோயாளியின் பொது ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
எனவே, மதுரை, சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 4.50 கோடி ரூபாய் மதிப்பில் நவீன பல் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கும் மையங்கள் அமைக்கப்படும்.
இதில், 1.05 கோடி ரூபாய் கட்டுமான பணிக்கும், 3.45 கோடி ரூபாய் நவீன பல் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய பயன்படுத்தப்படும்.
இதுகுறித்த அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

