UPDATED : அக் 28, 2026 06:02 PM
ADDED : அக் 28, 2026 05:59 PM
சென்னை: எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில், இனி அங்கன்வாடிகளுக்கு பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அரசாணை:
நடப்பு நிதியாண்டுக்கு, 234 சட்டசபை தொகுதிகளுக்கு தலா, 3.54 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 828.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
அதில், அனுமதிக்கப்பட்ட பணிகள் பட்டியலில், உபகரணங்கள், தளவாடங்கள் வாங்குவதற்கு அரசு பள்ளிகள், ஐ.டி.ஐ.,கள், கல்லுாரிகள், விடுதிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதில், அங்கன்வாடி மையங்களையும் சேர்க்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை கமிஷனர், அரசுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சம்பந்தப்பட்ட பிரிவில் அரசுப் பள்ளிகள், ஐ.டி.ஐ.,கள், கல்லுாரிகள், விடுதிகளுடன், அங்கன்வாடி மையங்களும் சேர்க்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான உபகரணங்களும் வாங்க செலவிட முடியும்.
