ADDED : ஆக 17, 2025 02:20 AM

சென்னை:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆக., 22ம் தேதி தமிழகம் வருகிறார். திருநெல்வேலியில் நடைபெறும் பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பணிகளை, தமிழக பா.ஜ., துவக்கி உள்ளது. அதன்படி, சட்டசபை தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி, அதன் நிர்வாகிகளுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுதும் எட்டு இடங்களில், 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாட்டை நடத்த, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.
முதல் மாநாடு, திருநெல்வேலியில் இன்று நடக்க இருந்தது. இதில், தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 28 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, 8595 பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க இருந்தனர்.
பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகாலாந்து கவர்னருமான இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். திருநெல்வேலியில் இன்று நடக்க இருந்த, 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.
மாநாடு ஆக., 22ம் தேதி, திருநெல்வேலியில் நடைபெறுகிறது. அன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருநெல்வேலி பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.