ADDED : ஆக 24, 2025 03:46 AM
ஈரோடு: தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, அளித்த பேட்டி:
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், நடிகர் விஜய் மனம் போன போக்கில் பேசியுள்ளார். அதற்கெல்லாம் பதில் சொல்லி, அவருக்கு நாங்கள் விளம்பரம் செய்ய வேண்டியதில்லை.
விஜய் பேசியது குறித்து, மக்கள் தான் கருத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் தெளிவானவர்கள், யாரை எங்கு வைக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
முதல்வரின் வயது, அனுபவம், மக்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அனைத்தையும் நாங்கள் நேரடியாக பார்த்து வருகிறோம்.
ஆனால், அவர் முதல்வரை, நாகரிகமின்றி விமர்சித்துள்ளார்.
வரும் சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணித் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மீண்டும் கூறியுள்ளார் மத்திய அமைச்சர் அமித் ஷா.
அவர் தன்னுடைய ஆசையை சொல்லியிருக்கிறார். அதில் தவறில்லை. ஆனால், ஆட்சி, எந்த மாநிலத்தில் என்பதை சொல்லியிருக்க வேண்டாமா?
அமித் ஷா ஆசை ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.