அணுக்கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளித்த அரசுக்கு அன்புமணி கண்டனம்
அணுக்கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளித்த அரசுக்கு அன்புமணி கண்டனம்
ADDED : செப் 28, 2024 07:19 PM
சென்னை:'கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது, மன்னிக்க முடியாத குற்றம்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில், 1144 ஏக்கரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்தகட்டமாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்து விட்டால், சுரங்கம் அமைக்கும் பணிகள் துவங்கி விடும்.
கன்னியாகுமரி மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சால், அங்குள்ள மக்கள், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல் நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இது தெரிந்திருந்தும், அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாதது. மத்திய அரசின் திட்டங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மட்டும் முந்திக்கொண்டு ஆதரவளிப்பதன் மர்மம் என்ன என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***