ADDED : ஆக 03, 2011 01:23 AM
கருப்பட்டி : மதுரை, சோழவந்தான் அருகேயுள்ள இரும்பாடி மாயாண்டிகோவில் அருகே, அங்கன்வாடி ஜன்னல் கம்பிக்கிடையே சிக்கிய நான்கு வயது குழந்தை இறந்தது.
இரும்பாடி அங்கன்வாடி பணியாளர், சுந்தரம்மாள், 48; அங்கு, 30 குழந்தைகள் படிக்கின்றனர். கூலி விவசாயி சதிஷ்குமாரின் மனைவி பஞ்சவர்ணம், 35. நேற்று காலை 9 மணிக்கு, தன் குழந்தை வைத்தீஸ்வரியை, 4, அங்கன்வாடியில் விட்டு விட்டு, வேலைக்குச் சென்றார்.
காலை 11 மணிக்கு, ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறிய வைத்தீஸ்வரி, ஜன்னல் கம்பிகளுக்கிடையே தலையை வெளியே நீட்டி வேடிக்கை பார்த்தாள். அப்போது கம்பியில் தலை சிக்கி, குழந்தை அழுதாள். பணியாளர் சுந்தரம்மாள் மற்றும் அருகில் இருந்தோர், கம்பியை வளைத்து, குழந்தையை மீட்டனர். உயிருக்குப் போராடிய குழந்தை, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது.
அங்கன்வாடியில் ஒரு பணியாளர், இரண்டு சமையல் செய்யும் ஆயாக்கள், பணியில் இருப்பது உண்டு. பணியாளர் குழந்தைகளை கவனிப்பார். இந்த அங்கன்வாடியில், பல மாதங்களாகியும், இரண்டு ஆயாக்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆயாக்கள் செய்யும் சமையல் வேலையில், பணியாளர் ஈடுபட்டிருந்த போது, இந்த துயர சம்பவம் நடந்தது. இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க, ஆயாக்களை நியமனம் செய்ய, மாவட்டம் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.