அண்ணாமலை குற்றச்சாட்டு புரியவில்லை: சுப்பிரமணியன்
அண்ணாமலை குற்றச்சாட்டு புரியவில்லை: சுப்பிரமணியன்
ADDED : ஜூன் 04, 2025 12:33 AM
சென்னை:''அண்ணாமலை என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டு என்னவென்று எனக்கு தெரியவில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலையில் நடந்த சம்பவத்தில், தமிழக காவல் துறை மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்து, ஐந்து மாதத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்று தந்துள்ளது. போலீசாரின் செயல்பாட்டுக்கு, நீதிபதியும் பாராட்டு தெரிவித்துள்ளார். வட்ட செயலர் சண்முகம் எனக்கு போன் செய்தார் என, அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். நான், மாவட்டச்செயலர். என் தலைமையில் உள்ள நிர்வாகத்தில், 82 வட்டச் செயலர்கள் உள்ளனர்.
தினமும், 10 முதல் 15 வட்டச் செயலர்கள், எனக்கு போன் செய்கின்றனர். இந்த தேதியில், இந்த நேரத்தில், வட்டச்செயலர், அமைச்சர் சுப்பிமணியனுக்கு போன் செய்துள்ளார் எனவும், அவரை விசாரிக்க வேண்டும் எனவும், அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்றே புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ''அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்லாத நாள் இல்லை. அந்த குற்றத்தில் ஈடுபட்டது, அவர் தான் என்று சொன்னால், அவர் என்ன பதில் சொல்வார். ஆதாரம் இருந்தால் அவர் வெளியிடலாம்; நீதிமன்றத்தை அணுகலாம். ஒரு அண்ணாமலை அல்ல ஆயிரம் அண்ணாமலை வந்தாலும், சந்திக்கத் தயாராக இருக்கிறோம்,'' என்றார்.

