கூட்டணி கட்சிகளின் நலனுக்காக மட்டும் செயல்படும் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
கூட்டணி கட்சிகளின் நலனுக்காக மட்டும் செயல்படும் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : நவ 12, 2025 07:44 PM

சென்னை:பிற மாநில முதல்வர்கள் எல்லாம், அந்தந்த மாநில மக்கள் நலனுக்காகச் செயல்படும்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும், தனது கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய அளவிலான அனுமதிச் சீட்டு பெற்றுள்ள வாகனங்கள், குறித்த காலம் வரை, எந்த மாநிலங்களுக்கும் செல்லலாம். திமுக அரசின் பேராசை காரணமாக, பிற மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களுக்கு, திமுக அரசு கூடுதல் சாலை வரி விதிக்கத் தொடங்கியது. இதன் காரணமாகப் பாதிப்புக்குள்ளான பிற மாநில ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், அந்தந்த மாநில அரசுகளை வலியுறுத்தி, தற்போது, பிற மாநிலங்களில் தமிழக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், திமுக அரசு தனது பேராசை காரணமாக, பிற மாநில வாகனங்களுக்குக் கூடுதல் சாலை வரி விதிக்கத் தொடங்கியதுதான். அத்தோடு மட்டுமல்லாமல், அந்த மாநிலங்களை ஆளும் தனது இணடி கூட்டணிக் கட்சியினரின் நலனுக்காக, இத்தனை நாட்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பிற மாநில முதல்வர்கள் எல்லாம், அந்தந்த மாநில மக்கள் நலனுக்காகச் செயல்படும்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும், தனது கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
உடனடியாக, கேரள, கர்நாடக மாநில அரசுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக ஆம்னி பஸ் போக்குவரத்து எதிர்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்ட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

