'முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு
'முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு
ADDED : பிப் 21, 2024 06:01 AM
சென்னை : ''விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், நடப்பாண்டு முதல், 'முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு, 206 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்,'' என, வேளாண் துணை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சட்டசபையில், அவர் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள்:
'முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம், 2024 - 25ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். மொத்தம், 22 திட்டங்களை உள்ளடக்கிய தொகுப்பாக செயல்படுத்த, 206 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* இதன்படி, வரும் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில், பசுந்தாள் உரம் பயிரிட, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதனால், 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்
* மண்புழு உரம் தயாரித்து, மண் வளத்தை பாதுகாக்க, 10,000 விவசாயிகளுக்கு, தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள், 6 கோடி ரூபாயில் வழங்கப்படும்
* வரும் ஆண்டில் 37,500 களர் நிலங்களை சீர்படுத்த, 7.50 கோடி; 37,500 ஏக்கர் அமில நிலங்களை சீர்படுத்த 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
இலவச வேப்பங்கன்று
* வேம்பினை பரவலாக்கம் செய்ய, 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள், வேளாண் காடுகள் திட்டத்தில், இலவசமாக வினியோகிக்கப்படும். இதற்கு, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* உயிரி பூச்சிக்கொல்லி பண்புகளுடைய, ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளின், 50 லட்சம் செடிகளை தரிசு நிலங்களிலும், வயல் பரப்புகளிலும் நடவு செய்ய,1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* மருத்துவ குணம் உடைய பாரம்பரிய நெல் ரகங்களை, 1,000 ஏக்கரில் சாகுபடி செய்ய, விதை வினியோகம் செய்யப்படும்
* வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்பட்டு, இதர விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்
* மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய, நவீன தொழில்நுட்ப நாற்றங்கால்கள் அமைக்க, வேளாண் காடுகள் திட்டத்தில், 13 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* வரும் ஆண்டில், 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க, 42 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் திட்டத்தை செயல்படுத்த, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* வீட்டுத் தோட்டத்திற்கு செடிகள் வழங்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இவை அனைத்தும், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
---
தேனீ முனையம்
* கன்னியாகுமரி மாவட்டத்தில், 3.60 கோடி ரூபாய் மதிப்பில், தேனீ முனையம் உருவாக்கப்படும்
* காலநிலை மாற்றம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.48 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* நுாறு உழவர் அங்காடிகள், 5 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
* அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேர்வு செய்யப்பட்ட, 2,482 ஊராட்சிகளில், 200 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
பயறு பெருக்கம்
* பயறு பெருக்க திட்டம், 4.75 லட்சம் ஏக்கரில், 40.27 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
* துவரையை 50,000 ஏக்கரில் தனி பயிராக, வரப்பு பயிராக அல்லது ஊடுபயிராக பயிரிட, 17.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
* உணவு எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் திட்டம், 45 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசு நிதியில், 2.50 லட்சம் ஏக்கரில் செயல்படுத்தப்படும்
* எள் சாகுபடி பரப்பை அதிகரிக்க, இடுபொருட்கள், அறுவடை செலவினம் மானியம் வழங்க, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சூரியகாந்தி சாகுபடி பரப்பு, 12,500 ஏக்கர் அதிகரிக்கப்படும்
* ஆமணக்கு சாகுபடியை, 1,500 ஏக்கரில் ஊக்குவிக்க, 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்
* விதை கிராம திட்டத்தில், 15,810 டன் விதைகள், 50 முதல் 60 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்ய, 35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்தி திறனை உயர்த்த, 48 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
ஒரு கிராமம் ஒரு பயிர்
* கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்த, 25,280 வருவாய் கிராமங்களில், 'ஒரு கிராமம் ஒரு பயிர்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த, குறு, சிறு விவசாயிகளுக்கு, 20 சதவீத கூடுதல் மானியம் வழங்க, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பருத்தி உற்பத்தி, தமிழகத்தில் 5.50 லட்சம் பேல்களாக உயரும்
* பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த, 1,775 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
சிறப்பு ஊக்கத்தொகை
* ஒரு டன் கரும்புக்கு, மத்திய அரசின் ஆதாய விலையுடன், 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை, 215 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர். இதற்கு, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு, மாநில அரசு நிதியிலிருந்து, 7.92 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* கள்ளக்குறிச்சி செங்கல்வராயன், செய்யாறு, திருப்பத்துார் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 12.50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* பெரம்பலுார், செய்யாறு, வேலுார், சேலம், மதுராந்தகம், சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலைகளில், 3.60 கோடி ரூபாயில், ஆலை அரவைப் பகுதி தானியங்கி மயமாக்கப்படும்
* சர்க்கரை ஆலைகளின் மேம்பாட்டிற்கு, 12.40 கோடி ரூபாய், ஆலை நிதியிலிருந்து செலவிடப்படும்
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

