டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து அறிவிப்பு: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து அறிவிப்பு: மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி
ADDED : ஜன 24, 2025 06:48 AM

தொண்டாமுத்துார்: ''டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுமையாக ரத்து செய்து அரசாணை வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், பேரூரில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுமையாக ரத்து செய்து, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதனால், அப்பகுதி மக்கள் இன்று இரவு நிம்மதியாக தூங்குவார்கள்.
தமிழகத்தில், 5,300 ஆண்டுகளுக்கு முன்பு, இரும்பு பயன்பாடு தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு தமிழனுக்கும் சந்தோசமானது. தமிழனாக பெருமை கொள்வோம்.
திருப்பரங்குன்றம், முருகன் ஸ்தலம் என்பதில், பல ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தி.மு.க., துாண்டுதலின் பேரில், எம்.பி., நவாஸ் கனி பிரச்னையை உருவாக்குகிறார்.
திருப்பரங்குன்றத்தில், பா.ஜ., மிகப்பெரிய இயக்கத்தை நடத்தும். திருப்பரங்குன்றத்தில், எனது விரதத்தின் முதற்கட்ட வேள்வியை நிறைவு செய்வேன்.
நமது நாட்டின் எல்லையை திருத்துவதற்கு அரசியலமைப்பின் முதலாவது சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், அதை செய்யாமலேயே கச்சத்தீவை கொடுத்துள்ளனர். கச்சத்தீவை கொடுத்ததால், இந்தியாவுக்கு தற்போது வரை ஒன்றும் கிடைக்கவில்லை.
கச்சத்தீவை கொடுத்ததற்காக, தி.மு.க.,வும், காங்கிரஸும் வீடு வீடாக சென்று மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி உறுதுணையாக நிற்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
நாங்கள், பெரியாரின் கொள்கைகளை ஏற்கவில்லை என்றாலும், அவரை அவமானப்படுத்த மாட்டோம். மக்கள் அவரை மறந்து விட்டனர். புது தலைமுறை வந்துள்ளது. அவர்களின் அரசியல் மொழி வேறு. சீமான் வேறு மாதிரி அணுகுமுறை கொண்டுள்ளார். நாங்கள் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான அரசியல் செய்து வருவதால், இது குறித்து பேச எங்களுக்கு நேரமில்லை.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால், முதல்வர் மீண்டும் பொய் பேச துவங்கி விட்டார். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

